Friday, December 20, 2013

என் சகோதரிக்காக










ஏதோ ஒரு நோக்கம்
அதற்காகத்தானே நீயும் பிறந்தாய்
என்னைப்போலவே
என் உறவாய் வந்தாய்
உயிராய் உள்ளாய்

உனக்கு பின்தான் நான் வந்தேன்
தங்கை என்று மகிழ்ந்திருந்திருப்பாய்
தாவி அணைத்திருந்திருப்பாய்
தாயாகி...தாலாட்டி
தோளில் தாங்கியிருந்திருப்பாய்
கைபிடித்து நடந்திருப்பாய்
கால்வழுக்கி விழுந்திடாது
காத்திருந்திருந்திருப்பாய்
என் கண்ணீர் கண்டு
நீயும் அழுதிருப்பாய்
“அக்காக்கு உன் மேல்
அலாதிப்பிரியம்”
அம்மா சொல்வாள்
அடிக்கடி கேட்டிருக்கிறேன்

அறியாத வயதில் எல்லாம்
அன்பை நீ சொரிவாயாம்
யாருமென்னை
அடிக்கவே விடமாட்டாய்
இதையும் அம்மாதான் சொல்லிவைத்தாள்

உன்பிஞ்சுவிரல் பிடித்து எனை அழைத்து செல்வாயாம்
பள்ளிக்குகூட பக்குவாய் அழைத்திடுவாய்
எத்தனை நீ செய்தாய் அன்றெனக்கு
இன்றுனக்கு
நோயென்று கண்டால்
விடுவனோ உனை நான் தவிக்க...
நீ எனக்கு சுமை என்பார் எல்லோரும்..
இல்லை..நீ
எனக்கு சுகமென்பேன்
அவர்கட்கு…

நீ என்தோழி…என் தாய்
என் சோதரி…
உடன் பிறப்பு இருக்கையில்
உன் வருத்தம் தேவையில்லை…
தாயில்லை என்றாலும்
தாங்குவேன் உன்தாயாக- நீ
தூங்கு அமைதியாக
தீராத நோயில்லை
நாளை தீரும்
எல்லாம் தானாக
நீ வாழ்வாய்
நலமாக நானிருப்பேன்
உனக்காக
கண்ணீர் வேண்டாம்- ஒரு
சிறு கலக்கமும் வேண்டாம்
புன்னகை போதும்-
  நாளை புதுவசந்தம் உனக்காய்
இருக்கும்


சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..