Tuesday, October 28, 2014

பலிஆடு


வாஞ்சையோடு அணைத்ததும்…
மேனியெங்கும் முத்தமழை பொழிந்ததும்
செவியோடு
இரகசியமாய் செல்லம் கொஞ்சியதும்
இன்றுவரையில்லாத
அன்பையெல்லாம் கொட்டிக்கொடுத்ததுவும்
தன்னை பலியிடத்தான் என்று…
பாவம் அந்த ஆட்டிற்கு
அப்போது தெரிந்திருக்கவில்லை…

Thursday, September 18, 2014

என் வீடு



இந்த வீடு இடிபடப்போகின்றது…
நாளையோ நாளை மறுதினமோ… இடிக்கப்படலாம்..
அதற்கான ஆரவாரங்கள்தான் நடந்து கொண்டிருக்கின்றன…
நான் அழுகின்றேன்..
என் வீடும் அழுகின்றது…
யாரும் புரியவில்லை…
நாற்சார வீடாம் ..நாகரிகமில்லையாம்
முற்றம் பெரிசாம்..
கூட்ட முடியுது இல்லையாம்
அட்டாச் பாதத்ருமும் இல்லையாம்..
ஆங்காங்கே உடைஞ்சிருக்காம்..
இவர்கள் அப்படித்தான் சொல்கின்றார்கள்..
என் பிள்ளைகள்..
வெளிநாட்டிள் ஒற்றை அறைக்குள்
உலகத்தை வைத்திருந்தவர்கள்..
இங்கு வந்து
வீட்டை இடிப்பதாக பேசிக் கொள்கின்றார்கள்..
அழகான மாடிவீடு..
அம்மா உனக்காக கட்டித்தருகின்றோம்…
அவர்கள் தான் சொல்கின்றார்கள்…
யாருக்கு வேண்டும் அது..
இந்த வீட்டின் ஒவ்வொரு கல்லிலிலும்
என் தந்தையின் வியர்வை…
தாயின் அன்பும் ஒட்டியிருக்கின்றது…
புரியுமா அவர்களுக்கு
என் நினைவு தெரிந்த போது கட்டப்பட்டது இந்த வீடு
அத்திவாரத்தில் எல்லாம்
நானும் தோழிகளும்
ரயில் பயணம் செய்திருக்கின்றோம்…
அதே அந்த மரத்தில் சாய்ந்தபடிதான்..
என் தந்தை..
எல்லாவற்றையும் ரசிப்பார்…
சுற்றிவர ஆறு அறைகள்
வீட்டின் நடுவில்…
சின்னதாய் ஒரு முற்றம்
சிமெந்து போட்டதுதான்…
ஆசையாயட சாய்ந்திருக்க
அழகிய இரண்டு திண்ணைகள்
பச்சைநிற பெயின்ற் அடித்து
பார்வைக்கு அழகான வீடானது…
என் தம்பி பிறந்ததும் இங்கேதான்…
நான் பெரியவளானதும் இந்தவீட்டில்தான்
என் திருமணம்கூட இந்த வீட்டில்தான்…
என் மூத்த மகன் பிறந்ததும் இதே வீட்டில்தான்
இளையவள் பிறந்ததும் இங்கேதான்..
எல்லா சந்தோசங்களையும் தந்தது இந்தவீடுதான்..
சோகங்களையும் தாங்கியது… இந்த வீடுதான்..
அப்பாவின் மறைவில் அழுதது வீடு
அதை தொடர்ந்த அம்மாவின் இறப்பிலும் கலங்கியது வீடு..
எல்லாம் இழந்து வெறிச்சோடிபோனது…
பிள்ளைகள் வளர்கையில்.. சோகம்
மெல்ல மறைந்தது…
மறுபடி வீடு சந்தோசம் கொண்டது…
பிள்ளைகள் அழுகையில் தானும் அழுதது
விiளாயடி வீழ்கையில் அடிபடாமல்
காத்தது..
படிக்கும் போது தானும் விழித்தது..
பட்டம் பெறுகையில் தானும் மகிழ்ந்தது…
தூரதேசம் போகையில் பிரிவில் அழுதது..
எனக்கு துணையாய் எப்போதும் இருந்தது…
என் வீட்டை இவர்கள் இடிக்கப்போகிறார்கள்..
இதயம் கனக்கின்றது..
விழிகள் அழுகின்றன… வீடும் அழுகின்றது…

விழிதுடைத்து எமுகின்றேன்..
இல்லை.. இந்த வீட்டை இடிக்க விடக்கூடாது…
நானிருக்குமட்டும் எதுவும் வேண்டாம்…
என்வீடு இப்படியே இருக்கட்டும்…
இடிக்கவிடப்போவதில்லை இதைநான்…

Friday, August 15, 2014

அவள் தயாராகவில்லை...


அவன் நினைவுகளில் இருந்தும் விடுபட
அவள் தயாராகவில்லை
கேட்டுக்கொண்டிருத்தலை மட்டுமே அவளால் செய்ய முடிகின்றது
இன்று தவறிப்போன அழைப்பிற்காக…
நாளையும்…
நாளைமறுதினமும்
அதற்கு அடுத்த நாளும் அவள்
காத்திருக்கப்போகின்றாள்…
ஆனாலும்..
இன்றைய நாளின் வலி நாளை இருக்கப்போவதில்லை என்பது
அவளுக்கு தெரியும்..
அதற்காக  காத்திருத்தல்களில் இருந்தும் விடுபடவும்
அவள் தயாராகவில்லை

Tuesday, August 12, 2014

இவைதவிர என்ன செய்ய முடியும்….



அவளின் தொலைபேசி அழைப்புகளை
நிராகரித்து கொள்ளுகின்றேன்
அவளுக்கான என் அழைப்புகளையும் 
தவிர்த்து கொள்ளுகின்றேன்
அடிக்கடி அவள்மீதான
கோபத்தினை தேவையின்றி  காட்டுகின்றேன்;
அவளைக் காணும்போதெல்லாம் 
பாராதது போலவே செல்கின்றேன்
அவளைவிட்டு விலகிட எனக்கு
இவைதவிர வேறு என்ன செய்ய முடியும்…

எதிர்பார்ப்புகள்; நிறைவேறாதபோது…………



கோபப்படுகின்றார்கள்
யார் மீதாவது எரிந்து விழுகின்றார்கள்
சிலதை போட்டுடைக்கின்றார்கள்
சிலரை திட்டித் தொலைக்கின்றார்கள்
எதுவும் பேசாமல் இருக்கின்றார்கள்
சாப்பிடவும் பிடிக்காமல் இருக்கின்றார்கள்
முகத்தை தூக்கி வைத்திருக்கின்றார்கள்
தூங்குவதற்கு முயற்சிக்கின்றார்கள்
தூக்கம் வராமல் புரள்கின்றார்கள்
தொலைபேசி அடிப்பதை வெறுக்கின்றார்கள்
தூக்கி ரீசிவரை கீழே வைக்கின்றார்கள்
அழுவதற்கும் நினைக்கின்றனர்
யாரும் பார்த்திடாது துடைக்கின்றனர்
இப்படித்தான் எதையாவது செய்கின்றார்கள்
எதிர்பார்த்தது நிறைவேறாதபோது…

Thursday, August 7, 2014

எல்லாம் நாளை சரியாகிவிடும்…

எல்லாம் நாளை சரியாகிவிடும்…
இன்று தீர்க்க முடியாது என நீ நினைத்து கொண்டிருக்கும்
பிரச்சினைகள்…
குழப்பம் தருகின்ற வினாக்கள்..
முடிக்கப்படாத வேலைகள்…
சீர் செய்யப்படாமல்
இருக்கின்ற இந்த பாதைகள்…
உன் காலின் காயங்கள் எல்லாம் நாளை சரியாகிவிடும்

புரட்டிப்போடப்பட்டிருக்கும் புத்தக அலுமாரி
கலைந்துகிடக்கும் படிக்கின்ற மேசை
அடிக்கடி காணாமல் போய்…
கரைச்சல் தருகின்ற மின்சாரம்…
துக்கம் தருகின்ற …
துவைக்க வேண்டிய ஆடைகள்
எல்லாம் நாளை சரியாகிவிடும்..

அடிக்கடி அலறிக் கொண்டிருக்கின்ற
தொலைபேசி சத்தங்கள்…
சத்தமின்றி நின்றுவிட்ட எயார் கண்டி~ன்
அலுவலக டென்ஸன்கள்
எரிச்சலூட்டிப்போகும் யாரோ ஒருவர்
வார்த்தைகள்
எல்லாம்…எல்லாமே
நாளை சரியாகிவிடும்

காயப்படுத்தல்….



எப்போதும் யாரையாவது காயப்படுத்தி கொண்டே இருக்கின்றோம்..
ஒரு முறை…
இரண்டாவது முறை…
அதற்கு மேலும் என காயப்படுத்தல்கள் தொடரத்தான் செய்கின்றன…
எமக்கனானவர்களை…
எமது நேசிப்புக்குரியவர்களை…
எம்மில் அக்கறை கொண்டவர்களை
எமக்கு தெரிந்தவர்களை மட்டும்தான் எப்போதும் காணப்படுத்துகின்றோம்…

கத்தியின்றிய …
இரத்தம் சிந்தாத காயப்படுத்தல்கள்…
கண்ணீர் கண்டாலும் விடாத காயப்படுத்தல்கள்…
எப்பவும் ..
எமக்கு பிடித்தாமவர்களை நாம் காயப்படுத்திக்கொண்டே இருக்கின்றோம்..

ஒரு கோபப்பார்வையால்  காயப்படுத்துகின்றோம்…
அலட்சியப் பார்வையாலும் காயப்படுத்துகின்றோம்…
பாராமுகத்தாலும் காயப்படுத்துகின்றோம்..
மௌனங்களால்..காயப்படுத்துகின்றோம்
வார்த்தைகளாலும் காயப்படுத்துகின்றோம்
எப்போதும் எமக்கு பிடித்தமானவர்களை மட்டும்தான் காயப்படுத்துகின்றோம்…

சொல்வதை கேளாமல் காயப்படுத்துகின்றோம்
கேட்டதையும் செய்யாமல் காயப்படுத்துகின்றோம்..ஒருபோதும்
பேசாமல் காயப்படுத்துகின்றோம்…
பேசிப்பேசியும் காணப்படுத்துகின்றோம்
எப்போதும் எமக்க பிடித்தமானவர்களை மட்டும்தான் காயப்படுத்துகின்றோம்
வலிக்கும் என்று தெரிந்தும்
மறப்பதில்லை …காயப்படுத்தல்களை….
எப்போதும் எமக்கு பிடித்தமானவர்களை மட்டும்தான் காயப்படுத்துகின்றோம்

அவளின் மரணம்….


அவள்போய்விட்டாள்…
இந்த ஊரைவிட்டு உலகை விட்டே அவள் போய்விட்டாள்
எங்களுக்கும் அவர்களுக்குமான உறவின் பாலமாக இருந்தவள் அவள்தான்
அவள் போய்விட்டாள்…
எங்களுக்கும் அவர்களுக்குமான உறவும்
இன்றுடன் முடியப்போகின்றது..

வாரத்தில் ஒருமுறை எனினும்
மாதத்தில் இருமுறையாவது
அவளைப்பார்த்திடத்தான்
அங்கு வருவதுண்டு…
எங்களுக்கும்… அவர்களுக்குமான
உறவினை…
நட்பினை..
அவள்தான் சொல்வாள்
அவள்தான் வளர்த்தாள்
இன்று அவள் போய்விட்டாள்…
எங்களுக்கும் அவர்களுக்குமான உறவு
இன்றுடன் முடியப்போகின்றது…

இனிமேல் இங்கு ஒருபோதும் நாங்கள் வரப்போவதில்லை
அவள் இல்லாத இடத்தில்
வருவதும் வெறுப்பாகும்…
எங்காவது இவர்களை சந்திக்க நேரிடும்…
ஒரு புன்னகை…
சிறு நலன் விசாரிப்பு…
அத்துடன் முடிந்துவிடும் எங்களின் உறவும்..

அவள்போய்விட்டாள்
எங்களுக்கும் அவர்களுக்குமான உறவின் பாலமானவள்
இன்று இறந்துவிட்டாள்
இன்றுடன் எங்களுக்கும் அவர்களுக்குமான உறவும்
முடிந்துவிடப்போகின்றது…

அவன் அவனாக இருத்தலால்………


விதி என்ற போர்வைக்குள் முடங்கிவிட
அவன் எப்போதும் தயாராக இருந்ததில்லை
கடவுளர் பெயர் சொல்லி ஒளிந்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை…
தன்னை நியாயப்படுத்தி கொள்வதற்காக வார்த்தைகளை
கோர்த்திடவும் அவனுக்கு பிடிப்பதில்லை
அவன் அவனாக மட்டுமே இருக்க விரும்பினான்
அதனால்தான்..
அவனையாருக்குமே பிடிக்காமல் போயிற்று….


இசைமாறிய பயணம்…2




இறைவனின் வீதியுலா..
முன்னே மேள நாதஸ்வரங்கள்…
முழங்கின…
“கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு…”
சாமியும் மாறிப்போயிருந்தார்
சினிமாவிற்குள்…

இசைமாறிய பயணம்…1



வெளிநாட்டில் பிள்ளைகள்
தந்தையின் மரண ஊர்வலம்
“பாண்ட்” வாத்தியங்கள்..
முழங்கி கொண்டிருந்தன…
இச்சு.. இச்சு… இச்சுகொடு…
“பொடி”மட்டும்தான்; அமைதியாய்  கிடந்தது…

Wednesday, April 23, 2014

வீதி விபத்து

வீதி விபத்து இருவர் பலி
இன்றைய செய்தியில் இதைப்படித்தேன்…
நேற்றைய செய்தியிலும்
இப்படித்தான் படித்தேன்…
நேற்றைக்கு முதல் நாளும்...
அதற்கு முதல் நாளும் கூட
இதே செய்தியை படித்தேன்
சென்ற கிழமை..
அதற்கு முதற் கிழமை..
போன மாதம்..
என ஒவ்வொரு நாளும்
இதே செய்தியை படித்தேன்
படிக்கிறேன்..
ஆனால்..
நான்கு வருடங்களுக்கு முன்னர்
இபபடிப்பட்ட செய்தியை படித்ததேயில்லை…

பேசும் கிளி பொம்மை






சின்ன வயது பிறந்தநாள் ஒன்றில்
அபபா வாங்கி தந்த அழகிய பொம்மை..
“பேசும் கிளிப் பொம்மை”
பச்சை வண்ண மேனி
இச்சை கொள்ள செய்யும்
இளஞ் சிவப்பு உதடுகள்
கொள்ளை அழகு
எனக்கே எனக்காக…
பேசும் கிளி…
அம்மா என்றழைத்தால் அதுவும் அழைக்கும்+
அப்பா என்றால்
அதுவும் அப்பா சொல்லும்
என் பெயர் சொன்னால் மீண்டும் சொல்லும்
எப்போதும் சொல்லி கேட்பேன் என் பெயர்..

பசிதூக்கம் மறந்து பச்சை கிளியே என் சொந்தமானது
பாய்ந்து தங்கை பறித்து செல்லாள்..
தா..”வென தம்பியும் விழுந்து அழுவான்
தரவே தரமாட்டேன்
அம்மாவின் கெஞ்சலக்காய் அரை நொடி கொடுத்து
படக்கென பிடுங்கி பத்திரமாய் வைப்பேன்..
பள்ளிக்கு போனபின்னால்… தங்கை எடுப்பாள்
தலை திருப்பி வைப்பாள்…
வேண்டாம் தொல்லையென…
என்னுள் எண்ணி…
கதிரை வைத்து மேவை மேல் ஏறி
பரணின் ஓரம் மெல்ல வைத்தேன்..
கிளி பறந்தது  என்று சொல்லி
பேசாதிருந்தேன் …
அவ்வப்போ நான் மட்டும் பரணில் ஏறி பார்த்தது இறங்கினேன்
சில நாள் செல்ல மெல்ல கிளியும் மறந்து போயிற்று..

காலம் மெரல்ல நகர்ந்து நெல்ல
ஊர்விட ;டோடிய ஓர் நாள் பொழுதில்..
கிளியும் சுத்தமாய் மறந்து போனது எல்லாம் போலவே..

பதினைந்து வருட இடைவெளி பின்னர்
அதே வீடு…
அதே நான்…யாருமற்ற தன்மையின் பிடியில்…
சுத்தப்படுத்த ஏறிய பரணில்…
எனது கிளி… அதே பேசும் கிளி…
பச்சை வர்ணம் மெல்ல கரைந்திருந்தது..
உதடுகள் இரண்டும் தனியே கிடந்தன…
பேமுடியவில்லை வாய்திறந்து அதனால்..
மெல்ல எடுத்து அழுத்தி துடைத்து
உதடுகள் ஒட்டி பத்திரப்படுத்தினேன்..
இப்பவும்…
அவ்வப்போ அது சொல்லும் அழகிய நினைவுகள்…
என் கிளி..
அப்பா வாங்கித் தந்த அழகிய கிளி..

Monday, April 7, 2014

அவளது கவிதை புத்தகம்



 அவளது கவிதைப் புத்தகம்
நெருப்பு பிடித்துவிட்டது
சாம்பலாகியும் விட்டது…
“நெருப்பென்றெழுதினால் என்ன சுட்டு விடுமா”
என்றே நினைத்தாள்
நெருப்பை எழுதினாள் எரிந்து போய்விட்டது
அவளது புத்தகம் சாம்பலாகி விட்டது…
இது எப்படி…
மழை … வெள்ளம்…
தண்ணீர்… கண்ணீர் … என்றெல்லாம் அதில் எழுதி வைத்திருந்தாளே
என்றாலும் எவற்றாலும் 
அந்த நெருப்பினை அணைக்கமுடியவில்லை..
அவளது புத்தகம்
எரிந்து சாம்பலாகி விட்டது.

Wednesday, April 2, 2014

நட்சத்திரமும் அவளும்


அவள் வீட்டு வானத்தில் ஓரு
ஒற்றை நட்சத்திரம்..
புதிதாய்…
இப்போதெல்லாம்.. அதனைப்பார்க்காவிட்டாலோ
பேசாவிட்டாலோ… அவளுக்கு
தூக்கம் வருவதேயில்லை…
நட்சத்திரத்தினுடனான பந்தம்
பிரிக்க முடியாததாகிவிட்டது
அவளைப் பார்த்திடவே
நட்சத்திரமும் அவள் வீட்டு வான் வரும்
அவள் இருக்கும் வரைக்கும் தான் அதுவும் இருக்கும்
அவள் உறங்கப் போகையில் அதுவும் போய்விடும்
அவள் பேசும் வார்த்தைகள் அதற்கு புரியும்
நட்சத்திரத்தின் மொழிகளும் அவளுக்கு;தான் புரியும்
பைத்தியக்காரத்தனம் என்பர் பலர்…
சிறு பி;ள்ளை தனம் என்பர் சிலர்
அவளுக்கு எது பற்றியும் கவலையேயில்லை
இரவு..
நட்சத்திரம் …
நி~ப்பதம்..
அவள்…
அவளின் அழகிய உலகம் இதுதான்…
ஆதரவின்றி ஆதரவு தேடவில்லை
நட்சத்திரத்திடம்;
ஆயிரம் உறவுகள்..
அவளை சூழ அன்பு மழை பொழியும்
அவளும் தான்…
ஆனாலும் இந்த நட்சத்திரத்தில்
அலாதிப்பிரியம்..
இவளுக்காகவே காத்திருக்கும்
அந்த ஒற்றை நட்சத்திரம்…
கண்சிமிட்டும் போதெல்லாம்
மெய்மறந்து போகின்றாள்…
பிறர் புரியமுடியா அதன் பாi~களை
மொழி பெயர்தது  கொள்கிறாள்…
விடுங்கள் அவளை..
நட்சத்திரத்துடன் பேசுவதை யாரும் தடுக்காதீர்கள்
அவளுக்கா இல்லாவிட்டாலும்…
ஒற்றையாய் இருக்கும் அந்த நட்சத்திரத்திற்காக..




மழையும் சிறுமியும்


மேகத்தில் இருந்து வீழ்ந்ததொருதுளி
மேனிதொட்டி உரசி சென்றது
மேலே பார்க்கையில் பலதுளி தெறித்தது
மழையாய் மண்ணில் சட சடத்ததது

மரங்கள் நிறைவாய் தலையத்தன
மனிதர் முகமும் சிரித்துக்கொண்டது
சிப்பிகள் மெதுவாய் திறந்து கொண்டன
மழை துளியுண்டு மறுபடி மூடிக் கொண்டன.
மகிழ்ச்சி மழைக்கு…
ஆனந்தமாடி அரவணைத்தது
மரங்களின் தூசுக்கள் வழித்தே துடைத்தது
மனங்களின் கவலையும் மறந்திட செய்தது
வீதிகள் எங்கும் வெகுவாய் ஒடி
தேடித்தேடி எங்கெங்கோ சென்றது…
கையில் ஏந்தும் தையல்களயும் முகத்தில் ஏந்தும்
சின்னஞ் சிறுசுகளையும்…
எண்ணி எண்ணியே மழையும் பெய்தது

கால் நனைப்பதும்
கப்பல் விடுவதும்…
மழையைய் கண்டால் தானே வந்திடும்
மழையும் மகிழ்ந்திற்று…

என்ன ஆச்சரியம்..
ஆங்கோர் சிறுமி…
வீடு முழுக்க வெள்ளம் நிரம்ப
மூன்றே காலில் நின்ற மேசையின் கீழே
தன்னுடல் நனைவதையும் பொருட்படுத்தாது
செல்ல நாய்க்குட்டியுடன் ஒதுங்கியிருந்தாள்…
புத்தகங்கள் எல்லாம் கப்பலாய் மிதக்க- அவள்
கண்ணீரும் மழையும் இரண்டாய் கலந்தன…
மழை அழுதது சோ வென…ஒருகணம்
சட்டென நின்றது…
சிறுமி மகிழ்ந்தாள்
கையை நீட்டி பாத்த்தன் பின்னர்…
நாய்க்குட்டி அணைத்துவெளியே வந்தாள்

மழைவருமா என்று வானம் பார்த்தாள்
அது வரவில்லை… மகிழ்ந்தாள்
மறுநாள்…
அதற்கு அடுத்தநாள்…
அதன் பின்பு …
ம்…மழை வரவேயில்லை…
மழை சந்தோசப்படுத்தி சென்றவை யெல்லாம்
இப்போது அதை திட்ட தொடங்கிவிட்டன…

சிறுமி மட்டும் வான்னோக்கி வணங்கினாள்
“மழையே இன்றைக்கு வந்திடாதே”
வானம் தெரியும் என்குடிசை வீடாகட்டும்
அப்போது அழைக்கின்றேன்..
அழகாய் வந்து விடு’

சிறுமியின் மெல்லிய பிரார்த்தனையில்
மழையும் மனமிரங்கி கொண்டது
வருந்தி யார் அழைத்தும் அது வரவேயில்லை

Thursday, January 16, 2014

கடவுளும் குழந்தையும்



யாரும் இல்லாத இந்த பிரபஞ்சத்தில்
தனித்துவிடப்பட்டேன்
காற்றாய் மிதக்கின்றேன்
கால்களையும் காணவில்லை
நேற்றுவரை சோறூட்டிய என் அம்மா எங்கே..
தோள்மீது தூக்கி திரிந்த என் அப்பா எங்கே..
யாரும் இல்லாமல்
நான் மட்டும்…
கடவுளுக்கும் சாத்தானுகக்கும்
இடையே நடந்த யுத்ததில்
கடவுளும் தோற்று போனாரா….
மனமுருகி வேண்டின் மனமிரங்கி வருவான்
கடவுள்…
வரமொன்று நாம் வேண்டின் தருவான்
பறந்து வந்து…
பாட்டி சொல்லி தந்திருந்தாள் இப்படித்தான்
பாலுக்கு அழுத பிள்ளைக்கு பால் கொடுத்தான்- தாயிழந்த
பன்றி குட்டிகளுக்கும் தயாயிருந்தான்
பாலர் வகுப்பிலே..இப்படித்தான்
அறிந்திருந்தேன் கடவுளை
கடவுள் நல்லவர்…
கண்மூடி வேண்டினேன்
காப்பாற்ற யாரும் இல்லை…
பறந்து வருவான் கடவுள் என
பார்த்திருந்தேன் வானை நோக்கி…
கடவுள் வரவேயில்லை…
துப்பாக்கி சத்தங்களிடையேயும்
தூங்காமல் பார்த்திருந்தேன் கடவுளை
கடவுள் வரவேயில்லை

 ஓரிரவு
 சட்டென்ற ஒரு ஒளிக்கிற்று வானில் இருந்து
 ஓ…கடவுளா…
 இல்லை…
 கடவுள் இல்லை
 காதை செவிடாக்கும் சத்மொன்று…நான்
 சாத்தான் கைகைகளில்
 கடவுளர் சொற்கள் எல்லாம் மறந்து
 சாத்தன் சொற்களே…
 இப்பபோதெல்லாம்
 காதில் இரைகின்றன

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..