Friday, December 20, 2013

என் சகோதரிக்காக










ஏதோ ஒரு நோக்கம்
அதற்காகத்தானே நீயும் பிறந்தாய்
என்னைப்போலவே
என் உறவாய் வந்தாய்
உயிராய் உள்ளாய்

உனக்கு பின்தான் நான் வந்தேன்
தங்கை என்று மகிழ்ந்திருந்திருப்பாய்
தாவி அணைத்திருந்திருப்பாய்
தாயாகி...தாலாட்டி
தோளில் தாங்கியிருந்திருப்பாய்
கைபிடித்து நடந்திருப்பாய்
கால்வழுக்கி விழுந்திடாது
காத்திருந்திருந்திருப்பாய்
என் கண்ணீர் கண்டு
நீயும் அழுதிருப்பாய்
“அக்காக்கு உன் மேல்
அலாதிப்பிரியம்”
அம்மா சொல்வாள்
அடிக்கடி கேட்டிருக்கிறேன்

அறியாத வயதில் எல்லாம்
அன்பை நீ சொரிவாயாம்
யாருமென்னை
அடிக்கவே விடமாட்டாய்
இதையும் அம்மாதான் சொல்லிவைத்தாள்

உன்பிஞ்சுவிரல் பிடித்து எனை அழைத்து செல்வாயாம்
பள்ளிக்குகூட பக்குவாய் அழைத்திடுவாய்
எத்தனை நீ செய்தாய் அன்றெனக்கு
இன்றுனக்கு
நோயென்று கண்டால்
விடுவனோ உனை நான் தவிக்க...
நீ எனக்கு சுமை என்பார் எல்லோரும்..
இல்லை..நீ
எனக்கு சுகமென்பேன்
அவர்கட்கு…

நீ என்தோழி…என் தாய்
என் சோதரி…
உடன் பிறப்பு இருக்கையில்
உன் வருத்தம் தேவையில்லை…
தாயில்லை என்றாலும்
தாங்குவேன் உன்தாயாக- நீ
தூங்கு அமைதியாக
தீராத நோயில்லை
நாளை தீரும்
எல்லாம் தானாக
நீ வாழ்வாய்
நலமாக நானிருப்பேன்
உனக்காக
கண்ணீர் வேண்டாம்- ஒரு
சிறு கலக்கமும் வேண்டாம்
புன்னகை போதும்-
  நாளை புதுவசந்தம் உனக்காய்
இருக்கும்


Wednesday, November 13, 2013

நீயில்லாத நாள்கள்



ஒவ்வொரு விடியலிலும்
மெலிதாய் ஒரு சோகம்
இனம் புரியாமல்…
என் விழி நனைக்கும்
உனதான பிரிவினை
மீள முடியாhதாய்
ஒரு துயரம்
எனை ஆட்கொள்ளும்

நீ சென்ற வழிபார்த்து
எதையோ இழந்த வெறுமையில்
வீணே கழியும் பொழுதுகளில்
என் நாள்கள் செல்கின்றன…

விதியின் மீதெல்லாம்
இப்போது
எனக்கு வெறுப்புதான் வருகின்றது
உன்னையும் என்னையும்
பிரித்து..
வேடிக்கை பார்க்கின்றது

நேற்றைய விடியலும்
இப்படித்தான்…
இன்றும் இப்படித்தான்
நாளை…hநாளை மறுநாள்
அதன்பின் வரும்
ஒவ்வொரு விடியலிலும்
இப்படித்தான் இருக்கப்போகிறது
நீயில்லாமல்


Thursday, November 7, 2013

தொலைந்த மனிதம்


சின்ன வயதில்
பக்கத்து வீட்டு மல்லிகா அக்கா
பாசத்தோடு..
கூண்டில் அடைத்த கிளியை..
அவர் பார்வையில் தப்பி..
பாவப்பட்டு திறந்து விட்டபோதும்…

என் சின்னத் தம்பி
ஒருநாள்..
தும்பிபிடித்து கட்ட முயன்ற போது
தும்மி அது கலைத்து 
காத்தபோதும்…

தெருவோரம் அடிபட்டு கிடந்த
நாய்க்குட்டி தனை தூக்கிவந்த
சோறூட்டி…
காயம் ஆற்றியபோதும்
ஆசையாய் வைத்த பூச்செடி 
வாடுகையில்
குடை வைத்து போனபோதும்…

வல்லூறு ஒன்று
தன் குஞ்சை தூக்கி செல்ல
குரல் கொடுத்த கோழி பார்த்து
கண்கலங்கி நின்றபோதும்…

தொலைந்து போகாமல் இருந்த 
மனிதம்…
இன்று…யாரோ
பிச்சைக்காய் நீட்டிய கையை
தட்டிவிட்டு வந்ததில்
தொலைந்து போனது…

வேண்டாம் உன் காதல்

நான் படிக்க வேண்டும் என்று
தான் விழித்திருக்கும்
அப்பா..

சின்னதாய் அனுங்கினாலே
நோய்தானோ ஏனோ…
என்று
துடித்து பதைத்து
தூங்காமல் விழித்திருக்கும் அம்மா

சின்னச் சின்ன செலவுகளுக்கென
தான் சேர்த்துவைத்திருக்கும்
பணமெல்லாம் கேட்கும் பொழுதெல்லாம்
தந்தென் சந்தோசம் காணும் அண்ணா

நேர்த்தியாய் அவள்
அடுக்கிவைக்கும் ஆடைகளை
கலைத்து நான் விட்டாலும்
சின்னவள் என்று செல்லமாய்..
அன்போடு தலைகோதிவிடும் அக்கா…

அடிபட்டு உருளும் சண்டையிலும்
அம்மாவிடம் அடிவாங்க விடாது
காக்கும்
தம்பியும் தங்கையும்…
இத்தனை சொந்தங்கள்
எனக்காய் இருக்க

உன்னோட காதலுக்காய்
இவர்களை தள்ளி
எப்படி வரலாம்?
நீயே சொல்லு

Saturday, October 26, 2013

அம்மா இல்லாத முதல் தீபாவளி
















அம்மா இல்லாத முதல் தீபாவளி
எப்போதும் போல இப்போதும் நினைவிருக்கின்றது
மறக்கவே முடியாத அம்மாவை போல- அதுவரை
சந்தோசங்களை மட்டுமே தந்து சென்ற தீபாவளி
முதன் முதலாய்   தீராத வலிதந்தது
எப்போதும் போல இப்போதும் நினைவிருக்கின்றது

காலையில் எழுப்பிவிடும் அம்மா அன்று இல்லை
தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்து
வேளையுடன் கோவிலுக்கு அழைத்து செல்வதற்கும்
அம்மா அன்று இல்லை
அம்மா இல்லாத முதல் தீபாவளி
மறக்க முடியவில்லை இனறும்

புத்தாடை அணிவித்து தலைசீவி பொட்டிட்டு
புதுமையாய் அழகு பார்க்கும் அம்மா இல்லை
விதவிதமாய் பலகாரம் விரும்பி சமைத்து
விருப்போடு பரிமாற அம்மா இருக்வில்லை
அம்மா இல்லாத முதல் தீபாவளி
மறக்க முடியவில்லை இன்றும்

அதன் பின்னரான ஒவ்வொரு தீபாவளியிலும் அம்மா இல்லை
அதிகாலை குளியல்…
புத்தாடைபுனைவு….
ஆலையம் செல்லல்
அறுசுவை உணவு
எல்லாம் இப்போது மீண்டும் வந்தாலும்
அம்மா இல்லாத முதல் தீபாவளி
மறக்க முடியவில்லை இன்றும்
உலக்துக்கேயான ஓட்டுமொத்த வெறுமையும்
இப்போதும்
எங்கள் வீட்டில் இருக்கின்றது
அம்மா இல்லாமல்…

Monday, October 21, 2013

ஒருநாள் கனவு


கண்ணுக்கெட்டிய தூரம்
வரைக்கும்
மணல்திட்டு
வானம்…
இந்த மண்…
நான் தவிர அங்கு யாருமே இல்லை
ஒற்றையாய் ஒரு பறவை
அது கூட இல்லை
எப்படி நான் இங்கு வந்தேன்
எனக்கு தெரியவில்லை
என்னுடன் வந்தவர்களெல்லாம் எங்கே
அதுவும் எனக்கு தெரியவில்லை
எங்கே செல்கிறேன்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
மணலுள் புதைந்து..
முடியவில்லை
மூச்சிரைக்கின்றது…
தாகம்
தண்ணீரும் இல்லை
மெல்ல நடக்கின்றேன்
சட்டென
பின்னால் ஒரு நிழல்
யாரது…?
தொண்டைவரைக்கும் வந்த வார்த்தை
வெளிவரவில்லை
யாராயிருக்கும்
திருடனா…?
திருடுவதற்கு தான் என்னிடம் எதுவுமே இவ்லையே
காதில் இருந்த
கவரிங் தவிர
பேயா…
சீ… இருக்காது
சின்ன வயதில் கேட்ட
பேய்க் கதைகள் எல்லாம் அப்போதுதானா
ஞாபத்தில் வரவேண்டும்..
அப்ப யாராது…?
உடல் வியர்த்துக் கொட்டியது
பயப்படுகிறேனா..
இல்லை
நான் பயப்படவில்லை…
ஒவ்வொரு அடியும் வேகமாகிறது
பின்னால் வந்த நிழல்
என் முன்னே…
ஐயோ…அம்மா…
“என்ன கனவா…:?
அம்மா அருகே…
சின்னச் சிரிப்பில்
சமாளிப்பு…
“கண்ட கண்ட புத்தகத்தை படிக்காதே
சொன்னால் கேட்டால்தானே”
அம்மாவின்
செல்ல திட்டு
மெல்ல சிரித்தேன்
அன்றைய நாளிதழே
பக்கத்தில் கிடந்தது

Thursday, October 10, 2013

நினைவில் நனைதல்



என் பிரியத்திற்குரிய
புத்தகத்தின்
பக்கங்கள்
கிழிக்கப்பட்டுவிட்டன..
மூடிவைத்திருந்த மயிலிறகும்
தொலைந்து போய்விட்டது
என்ன ஆச்சரியம்…!
மறுபடியும் அதே புத்தகம்
ஒட்டப்பட்டு…
அழகாய்..மயிலிறகும்…

மன்னிப்பாயா..


ஏதோ ஒரு வரி
உனக்காய் எமுதணும் சற்றும் எதிர்பாரா
குற்றம் ஒன்று
சாற்றின் நீ மன்னிப்பாயா…
காற்றோடு நீ போனாய்
கனவுகளை அள்ளிச் சென்றாய்
கவிதைகளை மட்டும்
மிச்சம் வி;ட்டுச் சென்றாய்
பட்டுப்போனதொரு கவி மரம்
தொட்டுத் துளிர்விட வியக்கின்றேன்
நீயா…
இல்லை…
நீயில்லை
அந்த யாரோ எனை
அழைக்கும் போதெல்லாம்….
உன்குரலாய்
உன் கெஞ்சல்களாய்…
மறந்துவிட நினைக்கும்
உன் ஞாபகங்களை
மறுபடியும் தூசிதட்டி
தந்துவிட்டதாய்…
ஒரு மயக்கம்…
ஒரு தடம் மாற்றம்…
சிறு சலனம்…
எல்லாம் ஒன்றாய்…
என்னை மன்னிப்பாயா…

Friday, September 20, 2013

வேறென்ன வேண்டும்


நிலா…வான்
கடல்…
நட்சத்திரம்
நீ…நான்

சின்ன மழை
ஒற்றைக் குடை
மெல்லிய சாரல்
நீ… நான்

ஒற்றை புத்தகம்
அழகிய கவி
படிக்கும் நான் பறிக்கும்
நீ…

சின்ன மௌனம்
சில்லறை கோபம்
செல்லக் கெஞ்சல்
நீ…நான்…

முற்றத்து மரம்
ஒற்றை நிழல்…
மெல்லிய இசை…
நீ… நான்…

வேறென்ன வேண்டும்

Wednesday, September 18, 2013

எனக்கான உன் காதல்



எனக்கான உன் காதல் உண்மையானதாகவிருந்தால்
நீ ஒன்றும் எனக்கு
நிலவாக இருக்க வேண்டாம்
சுட்டெரிக்கும் சூரியனாகவே இரு….
தீமைகளை நானும் சுட்டெரிப்பேன்

எனக்கான உன் காதல் உண்மையானதென்றால்
எனக்காக நீ ஒன்றும்
நதியாக இருக்க வேண்டாம்
காட்டாற்று வெள்ளமாகவே இரு- சமூக
அழுக்குகளை எல்லாம் அடியோடு அகற்றுவேன்

எனக்கான உன் காதல் உண்மையானதென்றால்
எனக்காக நீ ஒன்றும்
தென்றலாக இருக்கவேண்டாம்
வீசும் புயலாகவே இரு
ப+மியை அழகாக்குவேன்


எனக்கான உன் காதல் உண்மையானதென்றால்
தீயாக, வெள்ளமாக,புயலாக
மொத்தத்தில் நீ நீயாகவே இரு…
அழகானதோர் உலகம் நான் சமைப்பேன்

Monday, September 16, 2013

அச்சாணி




பாரதப் போரின் பதினெட்டாம் நாளும் முடிந்தது
பாண்டவர் வெற்றிதான் பாரெங்கும்…
பார்த்தனின் தேருக்கோ பெருங்கர்வம்
“வெற்றி எம்மால்தான்…”
குதிரைகள் கூட குதூகலமாய் கனைத்து கொண்டன…
தேரின் குடையும் சொல்லிற்று…
நீண்ட நேரம் நின்று போரிட நிழல் தந்தேன்…
வெற்றி என்னால்தான்…
தேரின் பீடம் சும்மா இருக்குமா…?
பார்த்தன் நின்று போரிட
நானே உதவினேன்
வெற்றி எனதே….பீற்றிக்கொண்டது…
‘கர்ணனின் நாக அஸ்திரம்
பார்த்தன் மார்பை பதம் பார்த்திருக்கும்…
நாங்கள் மட்டும் தக்கதோர் சமயத்தில்
புதைந்திராவிட்டால்…”
தேர்ச்சில்லுகள் கூட
தமக்குள் சிலிர்த்துக் கொண்டன…
அச்சாணி மட்டும் எதுவும் பேசாமல்
அமைதியாய்  இருந்தது….
கண்ணணின் உபதேசத்தில்….
பார்த்தன் போலவே அதுவும்
பக்குவப் பட்டிருந்தது…















கடவுளின் ஞானத்தால் கூட
அதி புத்திசாலியாக நான் படைக்கப்படவில்லை- இதனால்
முட்டாள் தனமான என் செயல்கள்..
ஏற்றுக் கொள்ளப்படுகின்றன..
கடவுளால்
மன்னிக்கப்படுகின்றன.



பட்டாம் பூச்சி


காலை நேரத்தில் ஒருநாள்
என் காது உரசி…கன்னம் தொட்டு பறந்தது
ஒரு பட்டாம் பூச்சி
கறுப்பு நிறத்தில் வெள்ளை பொட்டுக்கள்
கண் கொள்ளா அழகு…
முற்றத்து பூச் செடியின் ஒற்றை இலையில்
ஒய்யாராமாய் …தன்
சின்னச் சிறகுகள் விரித்தது..
தொட்டு விட நினைத்து எட்டிப்பிடிக்கையிலே..
விர்” என்று பறந்து வேறு இலை அமர்ந்து
சிரித்தது பட்டாம் பூச்சி…
விட்டுவிட மனமில்லை…
எப்படியும் ஒருக்கா பிடித்திடணும்..
மெல்ல மூச்சை உள்ளெடுத்து…
ஓசைப்படாமல்…
ஒவ்வொரு அடியாய்…சென்று
இரு விரல் கொண்டு
இறகினை தொடுகையில்
சட்டென்று வந்த தும்மலில்
பட்டென்று பறந்தது என் பட்டாம் பூச்சி..
மறுபடியும் சிரித்தது..என்
தலை வருடி எங்கோ பறந்தது..

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..