Monday, January 23, 2012

என் உலகம்

என் கனவில் அடிக்கடி வரும் ஒரு உலகம்
அழகானது ரம்மியமானது..அங்கு யுத்தம் இல்லை சத்தம் இல்லை
கொலை இல்லை கொள்ளை இல்லை
கவலையில்லை கற்பழிப்புகளும் இல்லை...
மரணம் வரும் முதுமையில் மட்டும் தான்

பூக்களின் மகரந்தம் வீசும்
புட்களின் இன்னிசை கேட்கும்
 காற்று கவிபாடிச் செல்லும்
நாற்றுக்கள் எல்லாம் செழித்திருக்கும்
நன்மைகள் பலவும் விளைந்திருக்கும்

பஞ்சம் இல்லை பசியில்லை
பட்டினிதானும் சொட்டும் இல்லை
அவலம் இல்லை அநாதைகள்கூட அங்கு இல்லை
அழகிய உலகில் ஆண்டவனும் வருவான்

நான்பெரிது நீ பெரிது பேதம் அங்கில்லை
நல்லவரே எல்லோரும்
யாவரும் சமம் யாவரும் நலம்
மனித நேசிப்புகள் மட்டுமே இருக்கும்
அன்புதான் அங்கு ஆட்சி செய்யும்
மகிழ்ச்சி மனதில் நிறைந்திருக்கும்

விடியும் கனவு கலையும்
கொலை கொள்ளை கற்பழிப்பு என
பத்திரிகைகளில் பக்கம் நிறையும்
மறுபடியும் இரவுக்காய் காத்திருப்பேன்
கனவில்தான் உலகின் விடியலை காணலாம் என்பதால்

மீள் குடியேற்றம்

இது தான் எம் வீடு
கொஞ்சிக் குலாவி
நெஞ்சம் மகிழ்ந்திருந்த வீடு
இதில்தான் அப்பாவின் அலுவலக அறை
அதில் என்னது இருந்தது...
பக்கத்தில் அக்காவின்- இன்று
  எல்லாம் மண்ணோடு மண்ணாக
மொத்தக் குடும்பத்திற்கும்-இந்த
ஒற்றைக் கூடாரம்தான் தஞ்சம்...

நேற்றுப் பெய்த மழையின் ஈரம்
 இன்னும் காயவில்லை...
ஒரு வேளை உணவையாவது ஒழுங்காய் கொடுப்போம்
பருப் போடென்றாலும் - என்ற அங்கலாய்ப்புடன்
எரியவே மறுக்கும் அடுப்புடன்
போராடிக் கொண்டிருக்கும் அம்மா
இன்றும் மழைவருமா நேற்றுப் போல்
 எமையெல்லாம் தூங்க விடாது துரத்துமா...?
தாங்க முடியாத துயருடன் வானம் நோக்கும்
தங்கையின் வெறித்த பார்வை
கலையாத கனவுகளுடன் காத்திருந்து
 கணவனையும்...
 ஒற்றைக் காலையும் பறிகொடுத்து
தொலை தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்த களைப்பில்
அக்காவின் தொலைந்து போன நிஜமுகம்...

எப்படி வாழ்ந்த வீட்டில்
 இப்படி வாழ்கிறீர்களே" என்பதுபோல
கதிரையில்சித்திரமாய்...
பத்திரப்படுத்தப்பட்டிருக்கும்
அப்பாவினதும் தம்பியினதும் புகைப்படங்கள்
பரிதாபமாய் எமைப்பார்க்கும்
போரின் போது மடிந்தவர்கள் அவர்கள்
போரின் பின்னரும் நாங்கள்
 செத்துக் கொண்டிருக்கின்றோம்..
தினம் தினம்...
இதுதான் எங்களின் மீள் குடியேற்ற வாழ்வு

Tuesday, October 18, 2011

கிரகபலன்


முதலாம்வீட்டில் குரு
இரண்டாம் வீட்டில் சூரியன்
மூன்றாம் வீட்டில் சந்திரனென
இன்னாளும் அவன் வீட்டில்
எத்தனை அதிபதிகள்...
பாவம்
இத்தனைக்கும் அவனுக்குத்தான்
இல்லை ஒரு வீடு சொந்தமாய்

Monday, October 17, 2011

தேவை ஒரு வேலை


எனக்கு தெரியும்
இலஞ்சம் கொடுப்பது குற்றம்தான்...
ஆனாலும்...
எனக்கு தேவை உடனே ஒரு வேலை

Tuesday, June 28, 2011

ஒரு ஆத்மாவின் குரல்

இன்றுடன் நான் செத்து…

இரண்டு வருடங்களாம்…
நம்ப முடியவில்லை

நேற்றுப்போலிருக்கிறது…

அம்மாவின் அழு குரலும்

அக்காவின் ஓலமும்…
அப்பாவின் புலம்பலும்…

கேட்கின்றன

என் செவியில்  இன்னும்…

வாழத்தான் ஆசைப்பட்டேன்

வாழவிடவில்லையெனை…

ஏழுவயதினிலே…எமலோகம்

வருவேனென

யாரும் நினைக்கவில்லை

நானும் நினைக்கவில்லை…

எறிகணையின் சிதறல்கள்

என் உடலை துளைத்தபோது...

அம்மா…நான் உனை நினைத்தேன்…

தப்பவே மாட்னே; என உணர்ந்தபோது…

அப்பாவும்;…..அக்காவும்

வந்தார்கள் கண்முன்னே…

என் பள்ளிக் கூடமும் வந்து போனது

ஒர் நொடியில் நா வறள…உயிர்துடிக்க

மூச்சு விட முடியாமல்;;…

ஓரு மூன்றே நிமிடத்தில் நான் செத்துப்போனேன்…
செத்துப் போன இந்நாளில்

திவசம் நீர் செய்ய ...

வந்திருந்து பார்க்கின்றேன்…

வார்த்தைகள் வரவில்லை…

கண்ணில் நீர் கோர்க்கின்றேன்

அம்மா…

ஏன் கொன்றார் என்னை….!

Thursday, September 17, 2009

முடியுமா உங்களால்....

நேற்றுப் போல் இருக்கின்றன நினைவுகள் எல்லாம்....
ஊர்விட்டு ஒடிவந்து.....
உணர்விழந்து....என்
உயிர்மடடும் காத்து....
ஏன் வந்தேன்....
துப்பாக்கி சத்தங்களும்...
நின்றுபோய்விட்டாலும்..என் நினைவில்...
கேட்டபடியேதான்...
பொழுது புலராது ஒருகாலை நேரம்...
துரத்திவந்த துப்பாக்கி குண்டுகளில்...மாண்டுபோன
என்அம்மாவும...
மாமாவும்....
மறுநாள்...ஆட்லறியில்...
துடிதுடித்து செத்துப்போன...என்
அப்பாவும் தங்கையும்....
அள்ளி எடுத்து அழவும் முடியவில்லை...
செத்த வீடுகள் எல்லாம்...
மறுபடியும்...
மறுபடியும்...
சாவீடுகளாகத்தான்....
எல்லாம் நேற்றுப் போல்...
இருக்கின்றன....பாதைதறந்தாலும்
பயணம் மாறினாலும்....
ஊருக்கு போனாலும்...
உதவிகள்தான் நீர் தந்தாலும்...
அநியாயமாய் நீர் அழித்த ...
என் அம்மாவை...
என் அப்பாவை...
என்உடன் பிறப்புகளை....
திருப்பித்தர முடியுமா உங்களால்...
ஊர்விட்டு வந்தேன்அகதியாய் தான்...
ஊர் போகின்றேன்...அநாதையுமாய்....

Thursday, September 10, 2009

என் கவி

கனவு ஒன்று கண்டு அது கலைந்து
விழித்திருக்கையிலே...
கவியொன்று உள்ளமதில் கருக்கொள்ளும்...
கருக்கொண்ட கவிதன்னை காகிதத்தில் வடிப்பதற்கு...
எனதுள்ளம் துடிக்கும்...ஆனாலும்
தூக்கம் கண்ணைத் தழுவும்....
விடியும்...
வேலை...
விளையாட்டு ...
வீண் அரட்டை என்று...
நேரம் பறக்கும்....இப்படியே....
இப்படியே...
கருக்கொண்ட என் கவியெல்லாம்...
கர்ப்பத்திலே கலைந்து விடும்...

Monday, August 17, 2009

ஏக்கம்

அன்னை மடிதன்னில்....
அழகாய் நான் சாய்ந்திருக்க ....
அன்னையவள் என்கேசம் வருட....
அழகாய்...
ஆனந்தமாய்...
உறங்கினேன்....
விழிக்கவே கூடாதென ...
விழிகளை...
இறுக்க மூடினேன்...
தட்டி எழுப்பினாள் தோழி...
முட்டி வந்த கோபத்தை சட்டென்று கட்டுப்படுத்தி....
கட்டிலிலே எழுந்தமர்ந்தேன்...
என்ன கனவா? தோழியின் கேள்வி...
ம்... என் தலைமட்டும் அசைய மௌனமானேன்...
காலைக்கனவு கட்டாயம்...
பலிக்கும்...
உதட்டில் குறும்புடன் என்தோழி...
மூடநம்பிக்கையில் இருந்து அவள் முற்றுப் பெறவில்லை போலும்
உற்றுப்பார்த்தேன் சற்றே சிரித்தாள்...
என் இதுழோரமும் புன்னகை...
அது வெறுமையாய்....
நான் கனவில் கண்டது...
இறந்து போன...
என் அம்மாவை என்று....
பாவம்....
அவளுக்கெப்படித்தெரியும்....

Monday, May 25, 2009

வலி


புரியவே முடியாத சோகங்கள்...
ரணங்கள்.....
பேழைகள் தாங்கவோ...
பேரணிகள் நடத்தவோ எங்களால் முடியாது...
கறுப்புக் கொடிக்கு கூட நாங்கள் மறுக்கப்படுவோம்
துன்பங்களும் துயரங்களும்...
எங்களுக்கும் தான்...
கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்குகின்றோம்...

Monday, February 16, 2009

அவலம்

சின்னவயதில்...
சின்ன வேலைகூட தெரியாது...
அம்மா எப்பவும்...இப்படித்தான் செல்லமாய் ....
கடிவாள்
இப்போது நான் கொஞ்சம் பெரியவள்...
மொத்தக் குடும்பத்திற்கும் நான் தான் வேலைக்காரி....
இருபத்தைந்தில் திருமணம்...
இருபத்தியாறில் நான்...
விவையாதலால்.....

Monday, September 29, 2008

அன்பு


என் உயிர் உள்ளவரை....
உன் அன்பு....எனக்கு
ஒருபோதும் தேவையில்லை...
உன் அன்பு உள்ளவரை...
நான் வாழ்ந்தால்போதும்...

நினைவு


மழைவிட்ட பின்னரும்...
மரங்களின் தூறல்கள் போல...
பிரிவின் பின்னரும்...
உன்னுடைய நினைவுகள்...
நனைவதே மிகவும் பிடிக்கும்...
மழையிலும்.....
உன் நினைவிலும்...
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..