Monday, January 23, 2012

என் உலகம்

என் கனவில் அடிக்கடி வரும் ஒரு உலகம்
அழகானது ரம்மியமானது..அங்கு யுத்தம் இல்லை சத்தம் இல்லை
கொலை இல்லை கொள்ளை இல்லை
கவலையில்லை கற்பழிப்புகளும் இல்லை...
மரணம் வரும் முதுமையில் மட்டும் தான்

பூக்களின் மகரந்தம் வீசும்
புட்களின் இன்னிசை கேட்கும்
 காற்று கவிபாடிச் செல்லும்
நாற்றுக்கள் எல்லாம் செழித்திருக்கும்
நன்மைகள் பலவும் விளைந்திருக்கும்

பஞ்சம் இல்லை பசியில்லை
பட்டினிதானும் சொட்டும் இல்லை
அவலம் இல்லை அநாதைகள்கூட அங்கு இல்லை
அழகிய உலகில் ஆண்டவனும் வருவான்

நான்பெரிது நீ பெரிது பேதம் அங்கில்லை
நல்லவரே எல்லோரும்
யாவரும் சமம் யாவரும் நலம்
மனித நேசிப்புகள் மட்டுமே இருக்கும்
அன்புதான் அங்கு ஆட்சி செய்யும்
மகிழ்ச்சி மனதில் நிறைந்திருக்கும்

விடியும் கனவு கலையும்
கொலை கொள்ளை கற்பழிப்பு என
பத்திரிகைகளில் பக்கம் நிறையும்
மறுபடியும் இரவுக்காய் காத்திருப்பேன்
கனவில்தான் உலகின் விடியலை காணலாம் என்பதால்

மீள் குடியேற்றம்

இது தான் எம் வீடு
கொஞ்சிக் குலாவி
நெஞ்சம் மகிழ்ந்திருந்த வீடு
இதில்தான் அப்பாவின் அலுவலக அறை
அதில் என்னது இருந்தது...
பக்கத்தில் அக்காவின்- இன்று
  எல்லாம் மண்ணோடு மண்ணாக
மொத்தக் குடும்பத்திற்கும்-இந்த
ஒற்றைக் கூடாரம்தான் தஞ்சம்...

நேற்றுப் பெய்த மழையின் ஈரம்
 இன்னும் காயவில்லை...
ஒரு வேளை உணவையாவது ஒழுங்காய் கொடுப்போம்
பருப் போடென்றாலும் - என்ற அங்கலாய்ப்புடன்
எரியவே மறுக்கும் அடுப்புடன்
போராடிக் கொண்டிருக்கும் அம்மா
இன்றும் மழைவருமா நேற்றுப் போல்
 எமையெல்லாம் தூங்க விடாது துரத்துமா...?
தாங்க முடியாத துயருடன் வானம் நோக்கும்
தங்கையின் வெறித்த பார்வை
கலையாத கனவுகளுடன் காத்திருந்து
 கணவனையும்...
 ஒற்றைக் காலையும் பறிகொடுத்து
தொலை தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்த களைப்பில்
அக்காவின் தொலைந்து போன நிஜமுகம்...

எப்படி வாழ்ந்த வீட்டில்
 இப்படி வாழ்கிறீர்களே" என்பதுபோல
கதிரையில்சித்திரமாய்...
பத்திரப்படுத்தப்பட்டிருக்கும்
அப்பாவினதும் தம்பியினதும் புகைப்படங்கள்
பரிதாபமாய் எமைப்பார்க்கும்
போரின் போது மடிந்தவர்கள் அவர்கள்
போரின் பின்னரும் நாங்கள்
 செத்துக் கொண்டிருக்கின்றோம்..
தினம் தினம்...
இதுதான் எங்களின் மீள் குடியேற்ற வாழ்வு
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..