Wednesday, November 13, 2013

நீயில்லாத நாள்கள்



ஒவ்வொரு விடியலிலும்
மெலிதாய் ஒரு சோகம்
இனம் புரியாமல்…
என் விழி நனைக்கும்
உனதான பிரிவினை
மீள முடியாhதாய்
ஒரு துயரம்
எனை ஆட்கொள்ளும்

நீ சென்ற வழிபார்த்து
எதையோ இழந்த வெறுமையில்
வீணே கழியும் பொழுதுகளில்
என் நாள்கள் செல்கின்றன…

விதியின் மீதெல்லாம்
இப்போது
எனக்கு வெறுப்புதான் வருகின்றது
உன்னையும் என்னையும்
பிரித்து..
வேடிக்கை பார்க்கின்றது

நேற்றைய விடியலும்
இப்படித்தான்…
இன்றும் இப்படித்தான்
நாளை…hநாளை மறுநாள்
அதன்பின் வரும்
ஒவ்வொரு விடியலிலும்
இப்படித்தான் இருக்கப்போகிறது
நீயில்லாமல்


Thursday, November 7, 2013

தொலைந்த மனிதம்


சின்ன வயதில்
பக்கத்து வீட்டு மல்லிகா அக்கா
பாசத்தோடு..
கூண்டில் அடைத்த கிளியை..
அவர் பார்வையில் தப்பி..
பாவப்பட்டு திறந்து விட்டபோதும்…

என் சின்னத் தம்பி
ஒருநாள்..
தும்பிபிடித்து கட்ட முயன்ற போது
தும்மி அது கலைத்து 
காத்தபோதும்…

தெருவோரம் அடிபட்டு கிடந்த
நாய்க்குட்டி தனை தூக்கிவந்த
சோறூட்டி…
காயம் ஆற்றியபோதும்
ஆசையாய் வைத்த பூச்செடி 
வாடுகையில்
குடை வைத்து போனபோதும்…

வல்லூறு ஒன்று
தன் குஞ்சை தூக்கி செல்ல
குரல் கொடுத்த கோழி பார்த்து
கண்கலங்கி நின்றபோதும்…

தொலைந்து போகாமல் இருந்த 
மனிதம்…
இன்று…யாரோ
பிச்சைக்காய் நீட்டிய கையை
தட்டிவிட்டு வந்ததில்
தொலைந்து போனது…

வேண்டாம் உன் காதல்

நான் படிக்க வேண்டும் என்று
தான் விழித்திருக்கும்
அப்பா..

சின்னதாய் அனுங்கினாலே
நோய்தானோ ஏனோ…
என்று
துடித்து பதைத்து
தூங்காமல் விழித்திருக்கும் அம்மா

சின்னச் சின்ன செலவுகளுக்கென
தான் சேர்த்துவைத்திருக்கும்
பணமெல்லாம் கேட்கும் பொழுதெல்லாம்
தந்தென் சந்தோசம் காணும் அண்ணா

நேர்த்தியாய் அவள்
அடுக்கிவைக்கும் ஆடைகளை
கலைத்து நான் விட்டாலும்
சின்னவள் என்று செல்லமாய்..
அன்போடு தலைகோதிவிடும் அக்கா…

அடிபட்டு உருளும் சண்டையிலும்
அம்மாவிடம் அடிவாங்க விடாது
காக்கும்
தம்பியும் தங்கையும்…
இத்தனை சொந்தங்கள்
எனக்காய் இருக்க

உன்னோட காதலுக்காய்
இவர்களை தள்ளி
எப்படி வரலாம்?
நீயே சொல்லு

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..