Monday, September 16, 2013

அச்சாணி




பாரதப் போரின் பதினெட்டாம் நாளும் முடிந்தது
பாண்டவர் வெற்றிதான் பாரெங்கும்…
பார்த்தனின் தேருக்கோ பெருங்கர்வம்
“வெற்றி எம்மால்தான்…”
குதிரைகள் கூட குதூகலமாய் கனைத்து கொண்டன…
தேரின் குடையும் சொல்லிற்று…
நீண்ட நேரம் நின்று போரிட நிழல் தந்தேன்…
வெற்றி என்னால்தான்…
தேரின் பீடம் சும்மா இருக்குமா…?
பார்த்தன் நின்று போரிட
நானே உதவினேன்
வெற்றி எனதே….பீற்றிக்கொண்டது…
‘கர்ணனின் நாக அஸ்திரம்
பார்த்தன் மார்பை பதம் பார்த்திருக்கும்…
நாங்கள் மட்டும் தக்கதோர் சமயத்தில்
புதைந்திராவிட்டால்…”
தேர்ச்சில்லுகள் கூட
தமக்குள் சிலிர்த்துக் கொண்டன…
அச்சாணி மட்டும் எதுவும் பேசாமல்
அமைதியாய்  இருந்தது….
கண்ணணின் உபதேசத்தில்….
பார்த்தன் போலவே அதுவும்
பக்குவப் பட்டிருந்தது…















கடவுளின் ஞானத்தால் கூட
அதி புத்திசாலியாக நான் படைக்கப்படவில்லை- இதனால்
முட்டாள் தனமான என் செயல்கள்..
ஏற்றுக் கொள்ளப்படுகின்றன..
கடவுளால்
மன்னிக்கப்படுகின்றன.



பட்டாம் பூச்சி


காலை நேரத்தில் ஒருநாள்
என் காது உரசி…கன்னம் தொட்டு பறந்தது
ஒரு பட்டாம் பூச்சி
கறுப்பு நிறத்தில் வெள்ளை பொட்டுக்கள்
கண் கொள்ளா அழகு…
முற்றத்து பூச் செடியின் ஒற்றை இலையில்
ஒய்யாராமாய் …தன்
சின்னச் சிறகுகள் விரித்தது..
தொட்டு விட நினைத்து எட்டிப்பிடிக்கையிலே..
விர்” என்று பறந்து வேறு இலை அமர்ந்து
சிரித்தது பட்டாம் பூச்சி…
விட்டுவிட மனமில்லை…
எப்படியும் ஒருக்கா பிடித்திடணும்..
மெல்ல மூச்சை உள்ளெடுத்து…
ஓசைப்படாமல்…
ஒவ்வொரு அடியாய்…சென்று
இரு விரல் கொண்டு
இறகினை தொடுகையில்
சட்டென்று வந்த தும்மலில்
பட்டென்று பறந்தது என் பட்டாம் பூச்சி..
மறுபடியும் சிரித்தது..என்
தலை வருடி எங்கோ பறந்தது..

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..