Thursday, September 18, 2014

என் வீடு



இந்த வீடு இடிபடப்போகின்றது…
நாளையோ நாளை மறுதினமோ… இடிக்கப்படலாம்..
அதற்கான ஆரவாரங்கள்தான் நடந்து கொண்டிருக்கின்றன…
நான் அழுகின்றேன்..
என் வீடும் அழுகின்றது…
யாரும் புரியவில்லை…
நாற்சார வீடாம் ..நாகரிகமில்லையாம்
முற்றம் பெரிசாம்..
கூட்ட முடியுது இல்லையாம்
அட்டாச் பாதத்ருமும் இல்லையாம்..
ஆங்காங்கே உடைஞ்சிருக்காம்..
இவர்கள் அப்படித்தான் சொல்கின்றார்கள்..
என் பிள்ளைகள்..
வெளிநாட்டிள் ஒற்றை அறைக்குள்
உலகத்தை வைத்திருந்தவர்கள்..
இங்கு வந்து
வீட்டை இடிப்பதாக பேசிக் கொள்கின்றார்கள்..
அழகான மாடிவீடு..
அம்மா உனக்காக கட்டித்தருகின்றோம்…
அவர்கள் தான் சொல்கின்றார்கள்…
யாருக்கு வேண்டும் அது..
இந்த வீட்டின் ஒவ்வொரு கல்லிலிலும்
என் தந்தையின் வியர்வை…
தாயின் அன்பும் ஒட்டியிருக்கின்றது…
புரியுமா அவர்களுக்கு
என் நினைவு தெரிந்த போது கட்டப்பட்டது இந்த வீடு
அத்திவாரத்தில் எல்லாம்
நானும் தோழிகளும்
ரயில் பயணம் செய்திருக்கின்றோம்…
அதே அந்த மரத்தில் சாய்ந்தபடிதான்..
என் தந்தை..
எல்லாவற்றையும் ரசிப்பார்…
சுற்றிவர ஆறு அறைகள்
வீட்டின் நடுவில்…
சின்னதாய் ஒரு முற்றம்
சிமெந்து போட்டதுதான்…
ஆசையாயட சாய்ந்திருக்க
அழகிய இரண்டு திண்ணைகள்
பச்சைநிற பெயின்ற் அடித்து
பார்வைக்கு அழகான வீடானது…
என் தம்பி பிறந்ததும் இங்கேதான்…
நான் பெரியவளானதும் இந்தவீட்டில்தான்
என் திருமணம்கூட இந்த வீட்டில்தான்…
என் மூத்த மகன் பிறந்ததும் இதே வீட்டில்தான்
இளையவள் பிறந்ததும் இங்கேதான்..
எல்லா சந்தோசங்களையும் தந்தது இந்தவீடுதான்..
சோகங்களையும் தாங்கியது… இந்த வீடுதான்..
அப்பாவின் மறைவில் அழுதது வீடு
அதை தொடர்ந்த அம்மாவின் இறப்பிலும் கலங்கியது வீடு..
எல்லாம் இழந்து வெறிச்சோடிபோனது…
பிள்ளைகள் வளர்கையில்.. சோகம்
மெல்ல மறைந்தது…
மறுபடி வீடு சந்தோசம் கொண்டது…
பிள்ளைகள் அழுகையில் தானும் அழுதது
விiளாயடி வீழ்கையில் அடிபடாமல்
காத்தது..
படிக்கும் போது தானும் விழித்தது..
பட்டம் பெறுகையில் தானும் மகிழ்ந்தது…
தூரதேசம் போகையில் பிரிவில் அழுதது..
எனக்கு துணையாய் எப்போதும் இருந்தது…
என் வீட்டை இவர்கள் இடிக்கப்போகிறார்கள்..
இதயம் கனக்கின்றது..
விழிகள் அழுகின்றன… வீடும் அழுகின்றது…

விழிதுடைத்து எமுகின்றேன்..
இல்லை.. இந்த வீட்டை இடிக்க விடக்கூடாது…
நானிருக்குமட்டும் எதுவும் வேண்டாம்…
என்வீடு இப்படியே இருக்கட்டும்…
இடிக்கவிடப்போவதில்லை இதைநான்…

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..