Tuesday, September 30, 2008

அன்பு


என் உயிர் உள்ளவரை....
உன் அன்பு....எனக்கு
ஒருபோதும் தேவையில்லை...
உன் அன்பு உள்ளவரை...
நான் வாழ்ந்தால்போதும்...

நினைவு


மழைவிட்ட பின்னரும்...
மரங்களின் தூறல்கள் போல...
பிரிவின் பின்னரும்...
உன்னுடைய நினைவுகள்...
நனைவதே மிகவும் பிடிக்கும்...
மழையிலும்.....
உன் நினைவிலும்...

Friday, September 12, 2008

அளவையும் நானும்


அன்றொருநாள்....
அளவை படித்தால்...
ஆகலாம்...நல்ல தொழில் என்று...
நில அளவை பிரிவுக்குள்...
தள்ளி விட்டார்...
என்னினிய வாத்தியார்....
திசைகள்... தொடங்கி....
தியோடைலைற்றும்....
முடிச்சாச்சு....
புவிச்சுற்றுப் போல தலை...
சுற்றத் தொடங்கிற்று...
ஜயையோ... வேண்டாமென....
ஒடிவர நினைக்கையிலே...
ஆண்டவனாய் எனை அழைத்து...
அக்கரையில் விட்டுவிட்டார்...
"அப்பாடா"....என்று பெருமூச்சு விட்டு...
ஆண்டுகள் பல...
கடந்த நிலையில்....
இப்போது....
மறுபடியும் அளவையிலே....
திசைகளும்தான்....
தியோடலைற்றும் தான்....
அப்பப்ப...தலைசுற்றலும்தான்....
ஆனாலும்....இன்னும்...
ஓட நினைக்கவில்லை....அக்
காலம் வெகு தூரமும் இல்லை......

மரணத்தின் பின்……..


நாளை நான் இறந்து விடுவேன்.....
முற்றத்து மல்லிகையும் வேலியோரத்து.....
செவ்வரத்தையும்....
வழமை போல் பூக்கதான் போகின்றன...
ஆனாலும்...நான் அறிய மாட்டேன்....
மரண ஓலம்....
வீட்டை நிறைக்கும்....
'பொடி எப்ப எடுப்பினம்" அன்புடையோரின்
அக்கறையான விசாரிப்புகளும்.....
அடிக்கடி நடக்கும்.....
இதுவும் நான் அறிய மாட்டேன்.....
மாமரத்தின் உச்சியிலே கூடுகட்டி வாழும்
தூக்கணாம் குருவியும்....ஒரு கணம்
எட்டிப் பார்த்து செல்லும்......மறந்து விடும்...
உறவுகள் அழும்......
ஒன்று...இரண்டு....மூன்று....மாதங்கள்...
முழுசாய் ஓட....என் முகமும்...
மறந்து விடும்.....
கொஞ்சம்....கொஞ்சமாய்.....
சுவரில் சித்திரமாய்.....
என் படமும் ஏறிவிடும்.....
இவையும் நான் அறி;ய மாட்டேன்....
ஒரு வருடம் ஆகிவிட்டால்....
எல்லோரும் எனை மறந்திடுவர்.....என்
பெயர்கூட மறந்திடுவர்
ஆனாலும்....
எனக்காக....
எங்கோ ஒர் தொலை தூரத்தில்....
ஆத்மார்த்தமாய்….
இதயத்தின் வலியெல்லாம் ஒன்று சேர...
ஒரே ஒரு ஜீவன் மட்டும்....எப்பவும்
அழுது கெண்டிருக்கும்....
அது மட்டும் நான் அறிவேன்.....

கடிதம்


அன்போடு எனை வளர்த்த அன்னைக்கு
ஒரு கடிதம் எழுதவென மனம் துடிக்க
எடுத்தேன் ஒரு காகிதத்தை....
கொப்பியிலோ காகிதம் கையிலையோ பேனா....
சுகங்கள்... சுமைகள்....
துன்பங்கள்.. துயரங்கள்..
நீண்டநாள் பிரிவின்....
நினைவழியா நினைவுகள்...என
அடுக்கடுக்காய் பல நினைத்து....
சிவமயமும் இட்டாச்சு....
திகதியும் போட்டாச்சு...
அன்புள்ள அம்மா....என்று தொடங்கி...
அனைத்தும் தான் எழுதி...
இப்படிக்கு உங்கள் மகள்....
முடித்து கையெழுத்தும் வைச்சாச்சு....
மீண்டும்... மீண்டும் படித்து....
மனதில் திருப்தி வர...
நான்காக மடித்து...
"என்பலப்"தனிலும்
வைத்து விட்டேன்
அகம் மிக மகிழ்ந்தேன்...
என் அறியாமையை அறியாமலே...
கந்தசாமிப் புலவருக்கென கங்கையில்
விடுத்த ஓலையில்; கூட...
விபுலானந்தர் முகவரி
இட்டுத்தானே அனுப்பினார்...
அமரர் உலகில் இருக்கும்...என்
அன்னைக்கு....
ஆசையோடு நான் எழுதிய கடிதத்திற்கு...
எந்த முகவரியை இடுவது....
முகவரியோ தெரியாமல்....
ஒருவிதமும் புரியாமல்...
முட்டாள்தனமாய்....
எழுதிய கடிதமது...
பக்குவமாய் இன்றும்...
என்னிடமே.......

கடிதம்



அன்போடு எனை வளர்த்த அன்னைக்கு
ஒரு கடிதம்....
எழுதவென மனம் துடிக்க
எடுத்தேன் ஒரு காகிதத்தை....
கொப்பியிலோ காகிதம் கையிலையோ பேனா....
சுகங்கள்... சுமைகள்....
துன்பங்கள்.. துயரங்கள்..
நீண்டநாள் பிரிவின்....
நினைவழியா நினைவுகள்...என
அடுக்கடுக்காய் பல நினைத்து....
சிவமயமும் இட்டாச்சு....
திகதியும் போட்டாச்சு...
அன்புள்ள அம்மா....என்று தொடங்கி...
அனைத்தும் தான் எழுதி...
இப்படிக்கு உங்கள் மகள்....
முடித்து கையெழுத்தும் வைச்சாச்சு....
மீண்டும்... மீண்டும் படித்து....
மனதில் திருப்தி வர...
நான்காக மடித்து...
"என்பலப்"தனிலும்
வைத்து விட்டேன்
அகம் மிக மகிழ்ந்தேன்...
என் அறியாமையை அறியாமலே...
கந்தசாமிப் புலவருக்கென கங்கையில்
விடுத்த ஓலையில்; கூட...
விபுலானந்தர் முகவரி
இட்டுத்தானே அனுப்பினார்...
அமரர் உலகில் இருக்கும்...என்
அன்னைக்கு....
ஆசையோடு நான் எழுதிய கடிதத்திற்கு...
எந்த முகவரியை இடுவது....
முகவரியோ தெரியாமல்....
ஒருவிதமும் புரியாமல்...
முட்டாள்தனமாய்....
எழுதிய கடிதமது...
பக்குவமாய் இன்றும்...
என்னிடமே.......

விரோதம்


மௌனமே பாதுகாப்பு என்றிருந்தேன்....
அதுவே என் விரோதியாகும் வரை...
மெல்லப் பேசினேன்...
அது கூட என் விரோதியாகவே....

Thursday, September 11, 2008

நினைவுகள்

அழகான பொழுதுகள்...
உன்னோடு முடிந்து விட்டன...
அன்பான பார்வைகளும்...
வார்த்தைகளும்கூட....
உன்னுடனே முடிந்துவிட்டன...
உனக்காக வாழ்ந்த உன்னை விட...
எனக்காக வாழ்ந்த நீயே அதிகம்...
உனக்காக நான் வாழ்வதில்...
தப்பேது....
உலகமும் மாறலாம்...
உருவங்களும் மாறலாம்...
உன் நினைவுகளை எப்படி மாற்ற முடியும்...
நீ எங்கே என்று கேட்பவர்களிடம் எல்லாம்...
நீ இல்லை என்பதை எப்படி சொல்வேன்....
நான்தான்.. இறந்தும்...
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
நீயோ மரணத்தின் பின்பும்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்...
என்னுள்...

Wednesday, September 10, 2008

இலங்கை யுத்தம்

கொஞ்சம்...
கொஞ்சமாய்...
உங்களை நாமும்...
எங்களை நீங்களும்
அழித்துக் கொள்வோம்...
வருமொரு நாளில்....
நாங்களும் நீங்களும்
இல்லாது போக...
மிச்சமிருக்கும்...
மண்மேடுகளும்....
இக்கவிதையும் தான்...

முதற்சம்பளம்


மூன்றுவருடங்கள் முயன்றதன்
பயனாக...
வேலை நியமனம்....
கடிதம் கிடைத்தது...
அம்மாவின் சந்தோசம்...
அம்மன் படத்தருகே...
ஆசீர்வாதம் வாங்கும் போதே தெரிந்தது...
அக்கா எனக்கு என்ன வேண்டித்தருவாய்?
கழுத்தைக்கட்டிக் கொண்ட தம்பியின் கேள்வி இது...
எனக்கு சப்பாத்து...
அப்புறம் ஒரு சட்டை...
சம்மதமாய்... தலையாட்டிட துள்ளியோடும் தங்கை...
வேலைக்குப் போக தொடங்கவேயில்லை...
சம்பளத்தை என்ன செய்யலாம்...
மட்டும் கணக்குப் போட்டாயிற்று...
தம்பிக்கும் தங்கைக்கும் விரும்பியதெல்லாம்
வேண்டவேணும்...
அம்மாவிற்கு அழகாய்..ஒரு
 சாறி...
அப்புறம் அப்பாவிற்கு...
சேட்டும்....
உற்சாகத்தில் உறக்கமே வரவில்லை...
வேலையும் ஆரம்பம்...
களைப்பும் இல்லை ...
க டினமும் தெரியவில்லை...
ஆறாம் நாள் நடந்தது.. திருமணப் பேச்சு
பதினைந்தாம் நாள்.. திருமணமும் நடந்தாயிற்று...

வேலையும் கிடைத்தாயிற்று...
திருமணமும் நடந்தாயிற்று...
அவள் அதிஷ்ரசாலி
எல்லோரும் இப்படித்தான் சொன்னார்கள்...

ஒருமாதம் ஓடிவிட கையில் சம்பளம்..
கணவன் கையில் கனத்தது மனது...
கண்களில் கண்ணீர்...
தம்பியின் ஆசை...
தங்கையின் ஏக்கம்...
கன்னத்தில் வழிந்தது...
அம்மா அப்பா பரவாயில்லை...
ஏமாற்றங்கள் பழக்கப்பட்டிருக்கும்...
தம்பி..தங்கை..
அக்கா ஏமாற்றிவிட்டாள் ...நினைப்பார்களா
இல்லை என்னைப் புரிந்து கொள்வார்களா....

Friday, September 5, 2008

மனைவியின் சக்தி



Get Loveyou Graphics
உன் தேவைகளை எல்லாம் பார்த்து பார்த்து
செய்கின்ற நான்...
என் தேவைகளை எல்லாம்
எப்படி மறந்து போகிறேன்
என்றே தெரியவில்லை.....
எனக்கு பிடித்தமானவற்றை
எல்லாம் விட்டுவிட்டு.....
உனக்கு பிடித்தமானவற்றை
நேசிக்ககற்றுக்
கொண்டபோதுதான்....
என்னுள் சந்தோசம் பிறக்கிறது....
என்சமையலை நீ..பாராட்டும்...
போதெல்லாம் வியக்கிறேன்....
"எப்படி என்னால் முடிகிறது"
உன் பாராட்டை பெறுவதற்காகவே...
நான் சமைத்த உணவுகள் எல்லாம்...
மேசையில் போட்டியிடுகின்றன
புரியுமா உனக்கு....
கனவில் கூட நீதான் வரவேண்டும் என்று ...
என் தூக்கம் கூட அடம்பிடிப்பதை....
உன்னிடம் எப்படிச் சொல்வேன்...
உனக்குரிய கடமைகளை...
நிறைவேற்றும் போதுதான்..
என் மனம் உற்சாகப்படுகின்றது....
"எப்படி உன்னால் மடடும் எல்லாம் முடிகிறது"
நீ சிரிக்கும் போதுதான் நான் சிலிர்க்கிறேன்...
உனக்கு முன்பே இறந்து விட வேண்டும் என்று
கடவுளை வேண்டுகின்ற நான்...
நீ பிறந்த பின்பு தான் பிறக்க
வேண்டும்போதுதான் ....
அடுத்த பிறவியிலும் நானே
உன் மனைவியாக சந்தோசமடைகிறேன்..
எல்லாவற்றையும் விட...
உன் இலட்சியப் பாதையில்...என
வாழ்வை தியாகம் செய்யும் போது தான்...
வாழ்வின் அர்த்தம் புரிகிறது...
"இதுதான் காதலின் சக்தியா"
நீ கேட்கும் போதெல்லாம்..
சொல்ல நினைக்கிறேன்..
இதுதான் மனைவியின் சக்தி...

Thursday, September 4, 2008

தூக்கம்

அப்போதெல்லாம்....என்னை
உனக்கு நிரம்பவும் பிடிக்கும்....எப்போதும்
என் கூடவே இருப்பாய்...
பொம்பிளப் பிள்ளை என்ன பழக்கம்....
அம்மாவிடம் கூட எத்தனை முறை
எனை ஏச்சு வாங்க வைத்திருப்பாய்...
வகுப்பறையில்....
பேருந்தின் ஜன்னலோரப்...
பயணத்தில்....என்று
எப்பவுமே எனை அணைத்திருப்பாய்....
யாரைப்பற்றியும்....
உனக்கு கவலையே இல்லை....
அப்போதெல்லாம் உனை நான் நிரம்பவும்
வெறுத்தது என்னவோ
உண்மைதான்.....அதனால் தான்
எனைவிட்டு தொலை தூரம் சென்றாயா...?
என்னினிய தூக்கமே.....
வருந்தி அழைக்கின்றேன்....
மறுபடியும் என்னிடம் வந்துவிடு......

பாவிகள்


பணம் இல்லாமல்
தன வாழ்வு சிதறடிக்கப்பட்டதாக புலம்புகிறாள்..
அங்கொருத்தி...
பணம் தான் தன்னுடைய வாழ்க்கையை
சிதைத்து விட்டதாக புலம்புகிறாள்
இங்கொருத்தி...
மொத்தத்தில்
பணமும்...
பெண்ணும்...
பாவிகள்தாம்.

Tuesday, September 2, 2008



Get Flowers Graphics

அர்த்தம்



Get Love Graphics
அடுத்த வரும் ஆவணியில் திருமணம் என்றாய்...
அடடா...
அழைப்பிதழ் அனுப்பிடு என்றேன்...
பக்கத்தில் நீயில்லாமலா...?
சிரித்தாய்...
புரியவில்லை...
இன்று உன் பக்கத்தில்...
மணமகளாய் இருக்கும் போதுதான் உணர்கின்றேன்...
உன் சிரிப்பின் ...
அர்த்தமதை....!

அறுவடை

எங்களுரில் இப்போது
அறுவடைக்காலம்...
விதைக்கப்பட்ட
பயிர்களுக்கல்ல...
புதைக்கப்பட்ட மிதிவெடிகளுக்கு...

Saturday, August 30, 2008

இடைவெளி


உன்னை சந்திக்கின்ற அதிசயமான
பொழுதுகளில் எல்லாம்...
இடைவெளி விட்டுத்தான் இருப்பதுண்டு
நீ என்னை தொட்டு விடுவாய் என்ற அச்சமல்ல....
நம்மிடையே காதல்இருக்கட்டும்...
அதற்காகத்தான்...

Thursday, August 28, 2008

கடனாளி

கடவுளுக்கும் எனக்கும்
மண்ணில் கனக்க
கணக்கு வழக்கு…
அதனால்தான் அவன்….
மண்ணிற்கும் வருவதில்லை...என்
கண்ணிலும் படுவதில்லை

Wednesday, August 27, 2008

மொழி

கோபமாய் யாரையும்
ஏசியது கூட இல்லை
நான்...
என் மொழியை மிக நேசிப்பவள்.

முரண்




அவனும் நானும்..
எப்பவும் சண்டை போடுவோம்...
எனக்கும் அவனைப் பிடிப்பதில்லை...
அவனுக்கும் என்னைப் பிடிப்பதேயில்லை....
கதைக்காத பொழுதெல்லாம் அம்மாதான்..
கைபிடித்து விடுவாள்....
'கண்ணா... இவளையும் பள்ளியில
விட்டுவிடு.... .".
அம்மாதான் ஏற்றிவிட்டாள்
முதன் முதலாக.......
தைப்பொங்கலா....;
'கண்ணாவை கூப்பிடு....!
வருடப்பிறப்பா கண்ணாவை கூப்பிடு...
தீபாவளியா ....
'கண்ணா எங்கே...?
அம்மா தான் கேட்பாள்....
நான்தான் ஓடிப்போய் கூட்டி வருவேன்....
ஒருநாள்....
அப்பா வாங்கிவந்த
சாக்லெற்றை...
முழுவதுமாய் நானே சாப்பிட்டு விட..
;..'கண்ணாக்கு கொடு;க்கவில்லையா...".
அம்மாதான் ஏசினாள்....
'இந்தா இதைக் கொடு...".
என்று
வேறு சாக்லெட் தந்தவளும் அம்மாதான்...

நீண்டநாட்களின் பின் ஒருநாள்…
புதுச்சட்டையுடன்...
பள்ளிக்கு வெளிக்கிட்டு பாத்திருந்தேன்....
கண்ணனுக்காக...
வந்தான் சிரித்தபடி...
அம்மாவும் வந்தாள்
;..'கண்ணா நீ போ இனிமேல்
அவள் அண்ணாவுடன் வருவாள்... .".
அம்மாதான் சொன்னாள்....

அவனுக்கும் புரியவில்லை ....
எனக்கும் புரியவில்லை...

Tuesday, August 26, 2008


விடிகின்ற ஒவ்வொரு பொழுதும்
உன்னையே நினைத்துக் கொள்வேன்...அதற்கு
காரணம்...
நீ என்பதால்..
உன்னைப் பார்க்க விரும்பும் போதெல்லாம்...
உன்னோடு பேச விரும்பும் போதெல்லாம்...
பூக்களைத்தான் பார்க்கிறேன்...
அவற்றோடு தான் பேசுகிறேன்...
மௌனமாய் தலைசாய்த்து கேட்கும்...தாலாட்டும்
தாயாக...
அவையும் உன்னைப்போலத்தான்...

Monday, August 25, 2008

திருப்தி


உன் மௌனம்...
உன்வார்த்தை...
உன் புன்னகை...
உன் அன்பு...
எனக்கு கிடைத்த பெறுவதற்கரிய சொத்து...
இது போதும்...
என் வாழ்நாள் முழுதும்...

ஒற்றுமை


என் செல்போனிற்கும்
உனக்கும்
எப்பவுமே ஒரு ஒற்றுமை...
எப்பவுமே சிணுங்கிய படிதான்...

என்னிடம் இல்லை

பெண்ணே..!
என்னை எல்லோரும்...
இதயம்இல்லாதவன்...
என்றுதான் சொல்கிறார்கள்...
உண்மைதான்...
என்னிதயம் உன்னிடம் இருப்பது
அவர்களுக்கெங்கே தெரியப் போகிறது...

படிப்பு

புத்தகத்தை புரட்டுகிறேன்....
படிக்க முடியவில்லை...
தோன்றும் எழுத்தெல்லாம்...
உன் முகத்தின் சாயல்களாய்...
உன் முகத்தைப் பார்ப்பதற்காய்...
கணந்தோறும் வருடுகிறேன்
புத்தகத்தின் பக்கங்களை...

Saturday, August 23, 2008

நேற்றுச் செய்தவை...
இன்று செய்பவை...
நாளை செய்யவுள்ளவை..
எல்லாமே... எல்லாமே எனக்கு மறந்து போனது..
நீ மட்டுமே என் நினைவில்
நிற்பதால்....
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..